quinta-feira, 18 de janeiro de 2007

செய்தியரங்கம்



Este texto está escrito em tâmil;

இலங்கையில் 2 ஸ்றோக் ஆட்டோக்களுக்கு இறக்குமதித் தடை வருகிறது

இலங்கையில் மிகவும் பிரபல்யமான, ஆனால் எளிதான போக்குவரத்து சாதனமான 2 ஸ்றோக் என்ஜின்களைக் கொண்ட முச்சக்கர வண்டிகளின் இறக்குமதிக்குத் தடை விதிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

2008ம் ஆண்டு முதல் இந்தத் தடை அமுலுக்கு வருகிறது.

சுற்றுச் சூழலில், காற்று மிகவும் கடுமையாக மாசடைவதைத் தடுக்கும் நோக்குடன் சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த பிரேரணைக்கு இலங்கை அமைச்சரவை நேற்றைய தினம் அங்கீகாரம் அளித்ததாக, அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான, அனுர பிரியதர்ஷன யாப்பா இன்று கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இந்த அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2 ஸ்றோக் என்ஜின்களைக் கொண்ட முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்யத் தடைசெய்யப்படுவதுடன், 2011ம் ஆண்டு தொடக்கம் இவற்றுக்கான உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதும் தடுக்கப்படும் என்று அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இலங்கையில் அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த 2 ஸ்றோக் என்ஜின்களைக்கொண்ட முச்சக்கர வண்டிகளால் வெளியேற்றப்படும் இயந்திரப் புகையில் ஐதரோகாபன் போன்ற நச்சுப் பதார்த்தங்கள் அங்கீகரிக்கப்பட்ட நியமங்கள் மற்றும் பிரமாணங்களிற்கும் அதிகமாகக் காணப்படுகிறது என்று கூறிய அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, ஆனாலும், 4 ஸ்றோக் என்ஜின்களைக்கொண்ட முச்சக்கர வண்டிகளின் பாதிப்புக்கள் மிகவும் குறைவாக இருப்பதனால் இவற்றிற்கான இறக்குமதிகளை ஊக்குவிக்க அரசு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

மத்திய வங்கி புள்ளிவிபரத் தகவல்களின் படி இலங்கையில் ஏற்கனவே சுமார் 280,000 முச்சக்கர வண்டிகள் பாவனையில் இருக்கின்றன. அத்துடன் வருடாந்தம் சுமார் 40,000ற்கும் குறையாத முச்சக்கரவண்டிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவில் இருந்து தருவிக்கப்படும் பஜாஜ் முச்சக்கர வண்டிகளாகும்.

Nenhum comentário:

Postar um comentário